1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (06:55 IST)

நீச்சல் தெரியாதா? அப்படின்னா உங்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் கிடையாது

பட்டப்படிப்பு படித்து சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், இல்லையேல் சான்றிதழ் கிடையாது என்று மாணவர்களுக்கு சீனப் பல்கலைகழகம் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.



 


சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹார்வர்டு பல்கலைகழகம் என அழைக்கப்படும் ‘டிசிங்குவா’ பல்கலைகழகத்தின் கிளை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இயங்கி வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் பட்டம் பெற விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வெறும் பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு மாணவர்கள் பல்கலையில் இருந்து வெளியேறக்கூடாது என்றும் உடல் தரத்தை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி அவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது என்றும் முடிவு செய்த இந்த பல்கலைகழகத்தின் தலைவரான கியூ யாங் அனைத்து மாணவர்களுக்கும் உடற்பயிற்சி கட்டாயம் என்று கண்டிஷன் போட்டார். குறிப்பாக நீச்சல் கட்டாயம் என்றும் நீச்சல் தெரியாதவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் கிடையாது என்றும் அதிரடியாக அறிவித்தார்.

இதன்படி இந்த ஆண்டு செப்டம்பரில் புதிதாக பல்கலைகழகத்தில் சேர வரும் மாணவர்கள் கண்டிப்பாக நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 50 மீட்டராவது நீச்சலடிக்க தெரிய வேண்டும். இல்லையெனில் கல்லூரிப் படிப்பு முடிவதற்குள், நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.