1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (06:13 IST)

அமெரிக்கா முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்ட அங்கீகாரம்: உச்ச நீதிமன்றம்

அமெரிக்காவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் எந்தப் பகுதியிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
அமெரிக்காவில், ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் திருமண உறவு சில பகுதிகளில் உள்ளது. இதற்கு கடந்த 2004ஆம் ஆண்டு, முதன்முதலாக மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் மட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மேலும், சில மாநிலங்களில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், 14 மாநிலங்களில் தடை நீடிக்கப்பட்டிருந்தது.
 
இந்தத் தடையை எதிர்த்து, ஓரினச் சேர்க்கையாளர்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அமெரிக்கா, ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற அமைப்பைக் கொண்டது. இதில், சில மாநிலங்களில் வாழ்பவர்கள் மட்டும் ஓரினசேர்க்கை திருமணம் செய்து கொள்வதும், பிற மாநிலங்களில் வாழ்பவர்களுக்குத் தடை விதிப்பது, சமநீதி கிடையாது என்றும், எனவே, தடையை நீக்க வேண்டும் எனக் கோரினர்.
 
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், நாடு முழுவதும் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் எந்தப் பகுதியிலும் இனி சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் நீதி மன்றம் முன்பு கூடியிருந்த ஓரினைச் சேர்க்கை பிரியர்கள் மகிழ்ச்சியில் கோஷமிட்டனர்.
 
இந்தத் தீர்ப்பு அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்று அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.