வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (09:42 IST)

தென்கொரியாவில் நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது; 291 பேர் மாயம்!

தென்கொரியாவில் சுற்றுலாப்பயணிகள் கப்பல் நடுக்கடலில் திடீரென மூழ்கியது. இதில் 6 பேர் பலியாகியிருப்பதாகவும் மற்ற 291 பேரை தேடும் பணி தீவிர்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணிகளுடன் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்தக்கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், சியோல் புறநகர் அன்சானில் உள்ள டான்வோன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவார்கள். இவர்கள் 4 நாள் சுற்றுலாப்பயணமாக சென்றார்கள்.

இந்தக்கப்பல் தனது பயணத்தின் நடுவழியில் நேற்று சற்றும் எதிர்பாராத வகையில் மூழ்கத்தொடங்கியது. கப்பலில் இருந்தவர்கள் அலறினர். தவித்தனர். இதுதொடர்பாக உடனடியாக தென்கொரிய கடலோரக்காவல் படைக்கு சிக்னல் அனுப்பப்பட்டது.

சிக்னல் கிடைத்ததும் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையின் 100 கப்பல்களும், படகுகளும், 18 ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஆனால் அந்தக்கப்பல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதுமே, அது மூழ்கி விடும் என கருதி பல மாணவர்கள் உயிர் பிழைக்கும் ஆவலில் கடலில் குதித்தனர்.
 
164 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 291 பேர் காணாமல் போய்விட்டதாகவும் பின்னர் அரசு தரப்பில் கூறப்பட்டது.  கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானோர் எண்ணிக்கை உயரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி அங்கு தீவிரம் அடைந்துள்ளது. கடற்படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.