வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2015 (17:41 IST)

சோமாலியாவில் ஹோட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்; தூதர் உள்பட 19 பேர் பலி!

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் ஒரு நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் திடீரென இந்த ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
முன்னதாக ஹோட்டலின் நுழைவுவாயில் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை தீவிரவாதிகள் மோதி வெடிக்கச் செய்தனர். பின்னர் ஹோட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஜெனீவாவுக்கான சோமாலிய தூதர் மற்றும் சோமாலிய அதிகாரிகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
 
பின்னர் ஹோட்டலில் இருந்தவர்களை பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க ராணுவத்திடம் பயிற்சி பெற்ற சோமாலிய சிறப்பு அதிரடிப்படை ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஹோட்டல் மீதான தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அரசு அதிகாரிகளை மட்டுமே நாங்கள் கொல்வோம். அப்பாவி மக்களை விடுவித்து விடுவோம்’ என்று தெரிவித்தார்.
 
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோட்டலின் பெரும்பாலான பகுதிகளை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. தொடர்ந்து தீவிரவாதிகளை நோக்கி தாக்குதல் நடந்து வருகிறது.