1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2015 (11:23 IST)

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ட்சோவ் சுட்டுக்கொலை

ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ட்சோவ் கிரெம்ளின் மாளிகைக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவர், போரிஸ் நெம்ட்சோவ்  அவருக்கு வயது 55. அவர் மாஸ்கோவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஒரு ஆற்றுப்பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். 
 
அப்போது அங்கே வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்கள் நெம்ட்சோவ் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே நெம்ட்சோவ் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
 
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சம்பவ இடத்தைச் சுற்றி  'சீல்' வைத்தனர்.
 
கொலை செய்யப்பட்ட போரிஸ் நெம்ட்சோவ், நீழ்னி நோவ்க்கிராட் என்ற பகுதியின் ஆளுநராக அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர், பின்னாளில், போரிஸ் எல்ட்சின் அதிபராக இருந்தபோது, நாட்டின் துணைப்பிரதமர் ஆனார்.
 
இவர் உக்ரைனுக்கு ஆதரவாக மாஸ்கோவில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். இந்த படுகொலைக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளாதிமிர் புடின் கூறியிருப்பதாவது:-

கூலிப்படை அமர்த்தி இந்த கொலை நடத்தப்பட்டுள்ளது. போரிஸ் நெம்ட்சோவ் தலைமையில் பேரணி நடக்கவிருந்த நிலையில் கொல்லப்பட்டிருப்பது, ஆத்திரமூட்டும் செயலாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு  கூறியுள்ளார்.
 
இந்நிலையில், போரிஸ் நெம்ட்சோவ் படுகொலை குற்ற விசாரணைக்கு ரஷிய உள்துறை அமைச்சர் விளாதிமிர் கோலோகொல்ட்சேவ் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், போரிஸ் நெம்ட்சோவ் படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
போரிஸ் நெம்ட்சோவ் ஓய்வு, ஒழிச்சலின்றி தனது நாட்டுக்காக உழைத்தவர். தனது சக குடிமக்களின் உரிமைகளுக்காக போராடியவர். ரஷ்யாவில் ஊழலுக்கு எதிரான அவரது துணிச்சலான போராட்டம் என்னை கவர்ந்ததாகும். 
 
இந்த படுகொலையில் ரஷியா தாமதமின்றி பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். கொலையாளிகளை பிடித்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகைக்கு அருகே நடந்த இந்த சம்பவத்தில், போரிசுடன் வந்த உரைன் பெண் கொலையாளிகளால் தாக்கப்படவில்லை என்பதும் அவர் நலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.