வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (12:37 IST)

"கோஹினூர் வைரம் இந்தியாவிடம் திருப்பியளிக்கப்பட வேண்டும்" - கெய்த் வாஸ்

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் கூறியுள்ளார்.
 

 
கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் உரையாற்றியபோது, ”இங்கிலாந்து தனது நலனுக்காகவே இந்தியாவில் ஆட்சி செய்தது. இந்தியாவில் கொள்ளை அடித்ததால்தான் இங்கிலாந்து தன்னை வளப்படுத்திக்கொண்டது.
 
இங்கிலாந்து அடிமைப்படுத்துவதற்கு முன்னர், உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 23 சதவீதமாக இருந்தது. ஆனால், இங்கிலாந்து வெளியேறியபோது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக குறைந்திருந்தது. இதனால், இந்தியாவுக்கு இங்கிலாந்து நஷ்டஈடு தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவரும், நெடுநாள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவருமான கெய்த் வாஸ் கூறுகையில், ”சசிதரூரின் பேச்சிற்கு வரவேற்பு அளிக்கிறேன். பிரதமர் மோடியிடம் இந்த கருத்தை வலியுறுத்துவேன்.
 
வரும் நவம்பர் மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்திற்கு பயணம் செய்யும்போது, இங்கிலாந்து பிரதமர் கேமரூன் இருதரப்பு உறவுகளையும், பராமரிக்க ஒரு வலுவான பாதையை ஏற்படுத்த வேண்டும். காலனியாதிக்கத்தின்போது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குறைந்தபட்சமாக, கோஹினூர் வைரத்தை திருப்பியளிக்க வேண்டும் 
 
நரேந்திர மோடி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பும்போது, கோஹினூர் வைரத்தை, அவரிடம் திருப்பி அளித்தால் அது அற்புதமான தருணமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.