1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 24 ஜனவரி 2015 (15:37 IST)

சவுதி அரேபிய மன்னரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் பிரதமர்

மறைந்த சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் உள்பட பல தலைவர்கள் மற்றும் இமாம்கள் கலந்து கொண்டனர்.
 
சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ், கடந்த 3 வாரங்களாக நிமோனியா நோயினால் அவதிப்பட்டு வந்தார். உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட மக்கள் சில மணி நேரத்திலேயே ரியாத்திலும் மெக்காவிலும் கூடி மன்னருக்கு அஞ்சலி செலுத்தினர்.

 
ரியாத்தில் உள்ள புகழ்பெற்ற 'இமாம் துர்கி பின் அப்துல்லா' மசூதிக்கு துணியால் மூடப்பட்டு மன்னரின் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு அவருக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. மன்னர் அப்துல்லாவுக்கான பிரார்த்தனைகள் அடுத்த மன்னராக பொறுப்பேற்க உள்ள சல்மான் தலைமையில் நடைபெற்றது.
 
அவரது இறுதிச்சடங்கில் துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட பல தலைவர்கள் மற்றும் இமாம்கள் கலந்து கொண்டனர். மன்னர் அப்துல்லாவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த எகிப்திய மன்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை.
 

 
இறந்த மன்னர் அப்துல்லாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அப்துல்லாவின் மறைவிற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
சவுதி அரேபிய மன்னருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.