செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (15:21 IST)

நேபாள நிலநடுக்கம்: ஹிரோசிமாவில் வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது: நிபுணர்கள் தகவல்

நேபாள நிலநடுக்கம் 20 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் எனவும், குறிப்பாக  ஜப்பானின் ஹிரோசிமா நகரில் வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது என்று  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 25ஆம் தேதி (சனிக்கிழமை) காத்மண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. காத்மண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஹோட்டல்கள், கோவில்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
 
இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும்  ஏராளமான மனித உடல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது.
 
7953 பேர்  காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேபாளத்தில் மீட்பு பணியில் இந்தியா உள்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடத்திற்கு மிகுந்த தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால் இந்தியாவில் 70-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். பீகாரில் 56 பேரும், உத்தரபிரதேசத்தில் 12 பேரும், மேற்கு வங்காளத்தில் 3 பேரும், ராஜஸ்தானில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்திய விமானப்படை இதுவரையில் 2,500-க்கும் அதிகமான இந்தியர்களை நேபாளத்தில் இருந்து மீட்டுள்ளது.
 
நேபாளத்தில் இதற்கு முன்பு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போது உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் அருகே நிலநடுக்கம் உருவாகியுள்ளது. பூமியின்  மிகப்பெரிய 2 ராட்சத நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேக மாக மோதிக் கொண்டதால் ஏற்பட்டதாகும். இது 80 ஆண்டுகளில் ஏற்கனவே உருவான நிலநடுக்கங்களை விட மிகப்பெரியதாகும்.
 
இந்த பூகம்பம் 20 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக  ஜப்பானின் ஹிரோசிமா நகரில் வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. நிலநடுக்கம் குறித்து ஆரம்ப கட்ட ஆய்வில் இந்த பயங்கர பூகம்பத்தால் நேபாளத்தின் தலைநகர் தெற்கே 3 மீட்டர் ( 10 அடி ) இடம் பெயர்ந்துள்ளதாக  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புவியமைப்பு நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறியுள்ளார்.