வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (14:39 IST)

முஹமது நபியை விமர்சித்த கவிஞருக்கு மரண தண்டனை

முஹமது நபியையும், சவுக்கடி தண்டனை வழங்கப்படுவதையும் விமர்சித்த பாலஸ்த்தீனிய கவிஞர் ஒருவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
 

 
சில வருடங்களுக்கு முன்பிலிருந்து, பாலஸ்தீனிய எழுத்தாளரும், கவிஞருமான அஷ்ரஃப் ஃபயாத் சவுதி அரேபியாவில் குடியேறி வசித்து வந்துள்ளார்.
 
2008ம் ஆண்டு இவர் எழுதிய Instructions Within என்ற புத்தகம் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமிய இறைதூதுவரான முகமது நபிகளை இழிப்படுத்தும் விதத்தில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
 
மேலும், கடந்த 2013ம் ஆண்டு இஸ்லாமிய மதத்திற்கு எதிராக செயல்பட்ட நபர் ஒருவருக்கு அதிகாரிகள் சவுக்கடி தண்டனை வழங்குவதை விமர்சித்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞர் அஷ்ரஃப் ஃபயாத் [வலதுபுறம்]
இதனை தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு சவுதி அரேபிய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. எழுத்தாளர் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறையும் 800 சவுக்கடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது.
 
இந்நிலையில், இஸ்லாமிய மதக்கடவுளான இறைதூதர் முஹமது நபியை விமர்சித்த காரணத்தால், அவருக்கு அதிகப்பட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
 
இதனையடுத்து, எழுத்தாளர் அஷ்ரஃப் ஃபயாத்திற்கு மரண தண்டனை விதிப்பதாக சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இனிமேல், சவுதி அரேபிய மன்னரான சல்மான் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால், தீர்ப்பு குறித்து கூறியுள்ள அஷ்ரஃப் ஃபயாத், ‘நான் இறைவன் மிகப்பெரியவன் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன். எனது புத்தகத்தில், என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள அளவிற்கு முட்டாள்தனமாக எதுவும் கூறவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.