வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (20:13 IST)

பாகிஸ்தானில் நேட்டோ படை ஆயில் லாரிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து நேட்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் 44 ஆயிரம் வீரர்கள் இந்த வருட இறுதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுகின்றனர்.
 
இவர்களுக்கு பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் உணவு, ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லாரிகளை வழிமறித்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றனர்.
 
இன்று மேற்கு பெஷாவரில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள கைபர் பழங்குடியினர் மாவட்டம் சோர் கமர் கிராமம் அருகே நேட்டோ படையினரின் ஆயில் லாரிகள் சென்று கொண்டிருந்தன. அப்போது மோட்டார் சைக்கிளில் ஆயுதத்துடன் வந்த தீவிரவாதிகள் 3 ஆயில் லாரிகளை துப்பாக்கியால் சுட்டனர். பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.
 
இதில் ஒரு டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பேர் காயம் அடைந்தனர். 3 ஆயில் லாரிகள் தீக்கிரையாகின. இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.