வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (16:41 IST)

ஜப்பானிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க அதிபர் ஒபாமா

ஜப்பான் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை வேவு பார்த்த விவகாரத்தில், அந்நாட்டிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாம மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
 

 
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் வேவுப்பார்வையில் ஜப்பானின் 35 முக்கியமான இலக்குகள் என்ற பட்டியலை விக்கிலீக்ஸ் கடந்த மாதத்தில் அம்பலப்படுத்தியது. அதில் முதலிடத்தில் ஜப்பானின் பிரதமர் சின்சோ அபேயின் பெயர் இடம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக அவரது நடவடிக்கைகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.
 
மேலும் ஜப்பானின் அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களும் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. இதே காலகட்டத்தில் ஜெர்மனியின் ஏஞ்சலோ மெர்க்கெல் உள்ளிட்டோரும் உளவு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர். இந்த உளவு விவகாரம் அம்பலமானதால் அமெரிக்காவுடனான உறவில் ஜெர்மனியும், ஜப்பானும் சிறிது தள்ளி நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
ஜப்பான் மக்கள் மத்தியில் இது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியது. வெறும் கவுரவப் பிரச்சனையாக மட்டுமல்லாமல், தேசத்திற்கு ஆபத்தாகவும் இதைப் பார்க்க வேண்டும் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எச்சரித்தன.
 
அதோடு, ஜப்பானின் பல இடங்களில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன. நிலைமை மோசமாவதால்தான் ஜப்பானிடம் அமெரிக்கா மன்னிப்பு கோர முன்வந்திருக்கிறது.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிஹிடே சுகா, “அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கோரினார். ஜப்பானில் இது மிகப்பெரிய விவாதத்தை தோற்றுவித்துள்ளது. உளவு பார்த்த விவகாரத்திற்காக நான் வருந்துகிறேன் என்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயிடம் அவர் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டார்.