1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (15:10 IST)

வடகொரியா எச்சரிக்கை; அமெரிக்கா - தென் கொரியா கூட்டு போர் பயிற்சி

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
 
வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ஆம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன. 1950–53 ஆண்டுகளில் இரு நாடுகள் இடையே போர் நடந்தது. அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே உரசல் நீடித்து வருகின்றது.

 
இந்த நிலையில், தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலடியாக வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில், நடப்பாண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் இதை தென்கொரியாவும், அமெரிக்காவும் நிராகரித்து விட்டன.
 
வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தென்கொரிய ராணுவ செய்தி தொடர்பாளர் கிம் மின் சியோக், சியோலில் நேற்று வெளியிட்டார்.
 
அப்போது அவர் கூறும்போது, ‘‘தென்கொரியா – அமெரிக்கா கூட்டு போர் பயிற்சி மார்ச் 2ஆம் தேதி தொடங்கும். மார்ச் 13–ந் தேதி முடியும். களப் பயிற்சி ஏப்ரல் 24ஆம் தேதி வரை தொடரும்’’ என்றார். இதில் 2 லட்சம் தென் கொரிய துருப்புகளும், 3,700 அமெரிக்க துருப்புகளும் இணைந்து செயல்படுவர் எனத் தெரிகிறது.
 
இது குறித்து, வடகொரியா அரசின் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தென்கொரியா – அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியின் நோக்கம், வடகொரியாவை தாக்கி ஆக்கிரப்பதுதான்’’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.