ஒருவழியாக கொரோனா இருப்பதை ஒத்துக்கொண்ட வடகொரியா! – விரைவில் ஊரடங்கு!?
உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் இதுநாள் வரை கொரோனா இல்லை என கூறிவந்த வடகொரியாவில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது. சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் வர்த்தக தொடர்புடைய நாடான வடகொரியா இதுநாள் வரை தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என கூறி வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வடகொரியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், முகக்கவசம் அணியாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அங்கு வந்த தென் கொரிய மக்கள் சிலருக்கு கொரோனா இருந்ததால் வட கொரியாவிலும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிபர் கிம் ஜாங் அன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.