வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 24 ஜனவரி 2015 (16:33 IST)

பீர் டின்களில் உள்ள காந்தி படத்தை நீக்க அமெரிக்க நிறுவனம் முடிவு

இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து பீர் டின்களில் பொறிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் படத்தை நீக்க உள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான 'நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி' சமீபத்தில் 'காந்தி பாட்' என்ற பெயரில் டின் பீர் ஒன்றை அறிமுகம் செய்தது. மேலும், அந்த பீர் டின்களில் மகாத்மா காந்தி படமும் அச்சிடப்பட்டிருந்தது.
 
இதற்கு இந்தியாவில் பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஆந்திர மாநிலம் நம்பள்ளி நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜனார்த்தன் கவுடா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இதையடுத்து, அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி மகாத்மா காந்தியின் படங்களை பீர் டின் மற்றும் பாட்டில்களில் உபயோகித்ததற்காக மன்னிப்பு கேட்டது. இருப்பினும், பீர் டின்களில் உள்ள காந்தி படத்தை நீக்கவில்லை.
இதனால், இந்தியர்களிடம் இருந்து மேலும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பீர் டின்களில் இருந்து காந்தியின் படத்தை இடம்பெறச் செய்ததற்கு பதிலடியாக, கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் காலணியில் அமெரிக்கர்கள் பெரிதும் போற்றும் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் படத்தை இடம்பெறச் செய்து, அதனை அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு உயர்மட்ட அரசு தலைவர்களுக்கு அனுப்பி வைத்தார்.
 
இந்நிலையில், மேற்கூறிய பீரின் பெயரை மாற்றவும், டின்களில் உள்ள காந்தி படத்தை நீக்க உள்ளதாக 'நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி' தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ''தற்போது பீருக்கு வைத்துள்ள, காந்தி பாட் என்ற பெயரை மாற்றுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் இந்தியர்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். மேலும், பிற பொருளாதார இழப்புகளையும் இது கட்டுப்படுத்தும்'' எனக் கூறப்பட்டுள்ளது.