வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 4 மே 2015 (20:54 IST)

நேபாள நில நடுக்கத்தில் சிக்கி 7 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட 101 வயது முதியவர்

நேபாளத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கிய 101 வயது முதியவர் 7 நாட்களுக்கு பிறகு நேற்று உயிருடன் மீட்கப்பட்டார்.
 
நேபாளத்தை கடந்த 25 ஆம் தேதி பயங்கர பூகம்பம் தாக்கியது. இதன் தாக்கம் இந்தியா, திபெத், பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த பயங்கர பூகம்பத்துக்கு தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 1.60 லட்சம் வீடுகள் தரைமட்டமாயின. 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை 7,300 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் நவ்காத் மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கிய பன்ச்சு தமாங் என்ற 101 வயது முதியவர் சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உடல் நலம் தேறிவருகிறார். ஒரு வாரமாக அவர் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 
 
இதே போல் சிந்துபால்சவுக் பகுதியிலிருந்து நேற்று 3 பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களில் இருவர் கட்டிட இடிபாடுகளில் இருந்தும், ஒருவர் நிலச்சரிவிலிருந்தும் மீட்கப்பட்டனர். அவர்கள் எத்தனை நாள் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர் என்பது உடனடியாக தெரியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் இனிமேலும் யாரும் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.