வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (20:31 IST)

தங்கம் நிரம்பிய நாஜி காலத்து ரயில் கண்டுபிடிப்பு

தங்கம், விலைமதிப்பற்ற கற்கள், துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயிலை கண்டுபிடித்திருப்பதாக 2 பேர் கூறியிருப்பதாக போலந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

945ஆம் ஆண்டில் போலந்து நாட்டு நகரமான வ்ரோக்லோவை சோவியத் படைகள் நெருங்கியபோது, இந்த ரயில் அந்தப் பகுதியில் காணாமல் போனது.
 
இந்தக் காணாமல் போன ரயிலை கண்டுபிடித்திருப்பதாக தங்களுக்கு இருவர் தகவல் அளித்திருப்பதாக தென் மேற்கு போலந்திலிருக்கும் ஒரு சட்ட நிறுவனம் கூறியிருக்கிறது.
 
அந்த ரயிலில் இருக்கும் பொக்கிஷத்தில் 10 சதவீதத்தை தமக்குத் தர வேண்டுமென அந்த நபர்கள் கோருவதாக போலந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரவிருந்த காலகட்டத்தில் க்ஸியாஸ் கோட்டைக்கு அருகில் தங்கமும் விலையுயர்ந்த கற்களும் நிறைந்த ரயில் ஒன்று காணாமல் போனதாக, அந்தப் பகுதியில் கதைகள் நிலவிவந்தன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் ரயில் பற்றிய தகவல்கள், காணாமல் போன ரயில் பற்றிய தகவல்களுடன் ஒத்துப் போகிறது.
 
க்ஸியாஸ் கோட்டையிலிருந்து 3 கி.மீ. தூரத்திலிருக்கும் வால்ப்ரைச் நகரில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகத்திற்குத்தான் இந்த கண்டுபிடிப்புப் பற்றிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
 
இந்த கண்டுபிடிப்பு குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், ஆனாலும் இது குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்போவதாகவும் வால்ப்ரைச்சின் உள்ளூர் தலைவரான ரோமன் ஸெலேமெய் கூறியிருக்கிறார்.
 
ரயிலைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லும் இரண்டு பேரில் ஒருவர் போலந்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்றும் அங்கிருக்கும் இணைய தளமான walbrzych24.com கூறியிருக்கிறது.
 
மேயர் தலைமையில் ஒரு அவசர குழு அமைத்து இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டுவருவதாக அந்த இணைய தளம் கூறியுள்ளது.
 
இந்த ரயில் 150 மீட்டர் நீளம் கொண்டது எனவும் 300 டன் தங்கம் அந்த ரயிலில் இருந்ததாகவும் மற்றொரு இணைய தளம் கூறியுள்ளது.
 
இந்த ரயில் ஒரு சுரங்கத்தில் செல்லும்போது மாயமானதாகவும் ரயிலில் தங்கமும் அபாயகரமான பொருட்களும் இருந்ததாக ஜோன்னா லம்பர்ஸ்கா என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகிறார்.
 
இந்தப் பகுதியில், இதற்கு முன்பாக ரயிலைத் தேடுவதற்கு நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன என ரேடியோ வ்ரோக்லா என்ற வானொலி தெரிவித்துள்ளது.