வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2015 (15:58 IST)

ஹிட்லரின் ’தங்க ரயில்’ கிடைக்குமா? மேலும் ஒரு ஆய்வுக்கு போலந்து ஒப்புதல்

இரண்டாம் உலகப் போரின்போது தங்கம், கலைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட ரயில் ஒன்று காணாமல் போனதன் மர்மம் பற்றிய ஆய்வுக்கு போலந்து அரசு ஒப்புதல் தந்துள்ளது.
 

 
ரஷ்யாவின் செஞ்சேனை ஹிட்லரை விரட்டிக் கொண்டு முன்னேறி வந்தபோது, இந்த விலைமதிப்புமிக்க பொருட்களுடன் கிளம்பிய மூன்று ரயில்கள் தற்போது செக் குடியரசின் எல்லைக்கருகில் 18 சதுர மைல் சுற்றளவிற்குள் மறைந்து போயின. மறைந்து போன இந்த ரயில்களைக் கண்டுபிடிக்க அமெரிக்கா, ரஷ்யா மற்றும் போலந்து உளவுத்துறைகள் பல முயற்சிகளை மேற்கொண்டன.
 
அந்த முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், போல் பியோட்டர் மற்றும் ஆண்ட்ரூஸ் ரிச்டர் ஆகிய இரண்டு நிபுணர்கள், தாங்கள் ஒரு ரயிலைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
பூமியைத் துளைத்துச் சென்று கண்டுபிடிக்கும் ரேடாரைக் கொண்டு அந்த ரயில் இருக்கும் இடத்தைத் தாங்கள் கண்டுபிடித்ததாக வரைபடங்களையும் அவர்கள் அரசிடம் தந்திருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதை அவர்கள் ஒப்படைத்தனர்.
 
ஆய்வுக்கு ஒப்புதல் தந்துள்ள போலந்து அரசு, மற்றொரு குழுவையும் நியமித்திருக்கிறது. கிராகோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழுவினரும் அதைத் தேடுவார்கள்.
 
நிபுணர்கள் கூறியுள்ள பகுதிகள் ஏராளமான சுரங்கப்பாதைகளையும், மறைவான பகுதிகளையும் கொண்டதாகும். இந்த கட்டமைப்புகள் சுமார் 30 ஆயிரம் போர்க்கைதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
 
ஆனால், இந்தப்பகுதியில் ஏராளமான கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. போலந்து ராணுவம் அதைத் தேடும் பணியில் ஈடுபட்டது. அத்தகைய வெடிபொருட்கள் இல்லை என்று அக்டோபர் மாதத்தில் ராணுவம் அறிவித்தது.
 
போலந்து அரசிடம் தங்கள் கண்டுபிடிப்பை முன்வைத்த பியோட்டர் மற்றும் ரிச்டர் ஆகிய இருவரும், தங்க ரயில் கையில் கிடைத்தால் அதில் உள்ள செல்வத்தில் பத்து சதவிகிதத்தைத் தாங்கள் வைத்துக் கொள்ள அனுமதி கோரியிருக்கிறார்கள்.
 
இதைத் தங்கள் வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ள போலந்து அரசு, இந்தக் கோரிக்கை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.