செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (12:53 IST)

நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம்: ரூ.4 லட்சம் கோடிக்கு மின் உற்பத்தி ஒப்பந்தம் செய்யத் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு  6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீட்டைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப், 26 ஆம் தேதி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
அதன்படி, 25 ஆம் தேதியே பிரதமர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். ஜெர்மனி தலைநகர் பிராங்பர்ட் நகரில் ஓய்வு எடுத்து விட்டு பயணத்தைத் தொடருவார். பின்னர், 26 ஆம் தேதி நியூயார்க்கில் தரை இறங்குவார். அன்றிரவு நியூயார்க்கில் தங்கவுள்ளார்.
 
இதைத் தொடர்ந்து 27 ஆம் தேதி மோடியின் 6 நாள் அமெரிக்க சுற்றுபயணம் தொடங்குகிறது. இதில் நியூயார்க்கில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரம் பகுதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்துவார். பின்னர், அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
 
மேலும், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசுவார். பேச்சு வார்த்தையில் அமெரிக்கா – இந்தியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின் உற்பத்தி திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
 
சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ. 7 கோடி செலவில் உபகரணங்கள் நிறுவப்பட வேண்டும். ஆகையால் 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.4 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும். இத்திட்டத்தை அமெரிக்கா உதவியுடன் செயல்படுத்த பிரதமர் மோடி மிகவும் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.