வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : வியாழன், 10 ஏப்ரல் 2014 (15:17 IST)

MH 370: இறுதி கட்டத்தை அடைந்த விமானத்தை தேடும் பணி

கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற MH370 விமானம் நடுவானில் மாயமானது. மாயமாகி ஒரு மாதமான நிலையில், இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் இந்த விமானத்தின் இருப்பிடம்  குறித்து எந்த உறுதியான தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த விமானத்தின் கருப்பு பெட்டி மிக விரைவில் செயலிழக்கும் என்பதால், விமானத்தை தேடும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    
 
மலேஷியாவில் இருந்து கடந்த மாதம் 8 ஆம் தேதி பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேஷிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கியதாக நீண்ட நாள் தேடலுக்கு பின் தெரிவிக்கப்பட்டது. 
 

இந்நிலையில், இந்திய பெருங்கடலில் இந்த விமானத்தை தேட 14 விமானங்களும், 13 கப்பல்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல நாட்களாக நடைபெறும் இந்த தேடுதல் பணியில், விமானத்தின் நொறுங்கிய பாகங்களோ அல்லது விமானத்தில் பயணித்தவர்களின் சடலங்களோ கிடைக்கவில்லை.  
 
அதிநவீன கப்பல்கள், மற்றும் கறுப்பு பெட்டியை கண்டறியும் கருவியின் உதவியோடு தொடர்ந்து நடைபெறும் இந்த தேடுதல் பணியில், கடந்த 4 நாட்களில் நான்கு முறை கறுப்பு பெட்டியை கண்டறியும் கருவிக்கு சிக்னல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
கறுப்பு பெட்டியின் பேட்டரி விரைவில் செயலிழந்து விடலாம் என்பதால் அதற்குள் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
விமானத்தை கடலில் தேடும் பகுதியில் தீவிரமாக தேடுதல் பணி நடைபெற்று வருவதால், சில நாட்களிலேயே விமானத்தை கண்டுபிடிக்க இயலுமென தேடுதல் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.