வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 நவம்பர் 2014 (06:14 IST)

மலேசியாவில் மேலும் கடுமையாக்கப்படுகிறது 'தேச நிந்தனைச் சட்டம்'

மலேசியாவில் மிகவும் சர்ச்சைகுரிய தேச நிந்தனைச் சட்டத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை, அது மேலும் கடுமையாக்கப்படும் என்று பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளதற்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சட்டம் முற்றாக விலக்கிக் கொள்ளப்படும் என்று கடந்த பொதுத் தேர்தலின் போது அவர் அறிவித்திருந்தார்.
 
அச்சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், கூடுதலான கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று அவர் கருதினாலும், அவரது அம்னோ(ஐக்கிய மலாய் தேசியக் கட்சி) கட்சியின் முன்னாள் தலைவர் மஹாதிர் முகமது உட்பட கட்சிக்குள் பலர் அதைக் கடுமையாக எதிர்ப்பதாலேயே இந்நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார் என்கிறார் பிரதமர் அலுவலகத்தில் சில காலம் துணை அமைச்சராக இருந்தவரும், ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவருமான வேதமூர்த்தி.
 
அண்மையில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு சிறுபான்மையினர் உட்பட பலர் அரசுக்கு எதிராக சுதந்திரமானக் கருத்துக்களை கூறிவந்த நிலையில், மக்களை ஒடுக்கும் நோக்கிலேயே தேச நிந்தனைச் சட்டத்தை பலப்படுத்த அரசு நினைக்கிறது என்கிறார் வேதமூர்த்தி.
 
நாட்டின் எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமும் அரசின் இந்த நிலைப்பாட்டைக் கடுமையாக வமர்சித்துள்ளார் என்று அவர் கூறுகிறார்.
 
அம்னோக் கட்சிக்குள் இருப்பவர்கள் நாட்டின் அதிகாரம் தமது கட்சியிடமிருந்து சென்றுவிடும் என்று அச்சத்த்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக பிரதமரை தேச நிந்தனைச் சட்டம் வலுவாக்கப்படும் எனக் கூற வைத்துள்ளனர் என்று மேலும் கூறுகிறார் வேதமூர்த்தி.
 
தேச நிந்தனைச் சட்டம் கடுமையாக்கப்படும் என்று பிரதமர் நஜீப் கூறியுளது, மலேசியாவிலுள்ள லட்சக் கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான அழுத்தங்களும் அடக்குமுறைகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.