வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 7 மார்ச் 2015 (10:04 IST)

எல்லை தாண்டி மீன் பிடித்தால் சுடுவோம் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டியது தானே? இங்கு எதற்காக வருகிறார்கள்? இது எங்கள் கடல் பகுதி. இதற்குள் எல்லை தாண்டி வந்தால் நாங்கள் சுடுவோம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசியுள்ளார்.
 
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்திய மீனவர்கள் அவர்கள் எல்லைக்குள் மீன்பிடிக்க வேண்டியது தானே? இங்கு எதற்காக வருகிறார்கள்? இது எங்கள் கடல் பகுதி. இதற்குள் எல்லை தாண்டி வந்தால் நாங்கள் சுடுவோம். அவர்கள் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்தால் யார், எதற்காக சுடப்போகிறார்கள்? எனது வீட்டை தகர்க்க யாராவது முயற்சித்தால் எப்படி நான் சுடுவேனோ, அதே போன்று தான் இதுவும். எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுடுவதில் எந்த மனிதஉரிமை மீறலும் இல்லை. இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டிச் சென்றதால் தான் இந்திய மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டுக் கொன்றனர். ஆனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிறகும் இத்தாலி மாலுமிகளை அவர்கள் நாட்டிற்கு செல்ல இந்தியா அனுமதி அளித்துள்ளது. இத்தாலி மாலுமிகளுக்கு அளித்த கருணையை இந்தியா ஏன் இலங்கை விஷயத்தில் காட்ட மறுக்கிறது?
 
2005 தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் 2009 இல் நடந்த படுகொலை நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். ராஜபக்ஷேவை அதிபராக்கியது தென்பகுதி மக்கள் அல்ல. ஏறக்குறைய 4 லட்சம் தமிழர்களை ஓட்டளிக்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷேவுக்கும், விடுதலை புலிகளுக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்தது. ராஜபக்ஷே, புலிகளுக்கு பணம் கொடுத்து தான் அதிபர் ஆனார். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த அமிர்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் தான் வாழ்ந்து வருகிறார். இது அனைவருக்கும் தெரியும். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பணத்தை பெற்றுக் கொண்டார். இதை ராஜபக்ஷேவும் மறுத்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்தார். அப்போது சிறிசேனா கூறுகையில், இலங்கை வரும் மோடியை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு தேவை. இந்தியா உடனான நல்லுறவை வளர்த்துக் கொள்ள இலங்கை தயாராக உள்ளது என தெரிவித்தார். இலங்கை அதிபர் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி உள்ள நிலையில், இலங்கை பிரதமர் மீனவர் பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளது இலங்கையின் இரட்டை வேடத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது.
 
இன்று நடைபெறும் சுஷ்மா- சிறிசேனா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, இலங்கை பிரதமர் தெரிவித்துள்ள கருத்து குறித்து பேசப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.