வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (17:29 IST)

பிரான்ஸில் நடந்திருப்பது பயங்கரவாத தாக்குதல் : பிரெஞ்சு அதிபர்

பிரான்ஸின் தென்கிழக்குப்பிராந்தியத்திலுள்ள வேதிப்பொருள் தொழிற்சாலையில் இஸ்லாமியவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவமானது பயங்கரவாத தாக்குதலுக்கான அனைத்து முத்திரைகளையும் கொண்டிருப்பதாக பிரெஞ்சு அதிபர் ஃபிராங்கோய்ஸ் ஒல்லாந்த் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்திலிருந்து தலை வெட்டப்பட்ட உடல் ஒன்று கண்டு எடுக்கப்பட்டிருப்பதாகவும், அந்த உடலில் எழுத்துக்கள் கீறப்பட்டிருந்ததகாவும் அவர் தெரிவித்தார்.

அந்த கட்டிடத்தை வெடித்து தரைமட்டமாக்குவதே இந்த தாக்குதலின் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஒல்லாந்து தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் ஒருவர் தலைவெட்டிக் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்திருக்கிறது.

லியான் நகரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த தொழிற்சாலையின் பாதுகாப்புத்தடைச்சுவரில் பலர் பயணித்த ஒரு கார் வந்து மோதியதாகவும் அதைத்தொடர்ந்து அங்கே வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முப்பது வயதுடைய ஒரு நபரை அந்த தொழிற்சாலையில் வைத்து தாங்கள் கைது செய்திருப்பதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நபர் பிரான்ஸின் புலனாய்வுத்துறையினருக்கு தெரிந்த நபர் என்றும் பிரான்ஸின் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வளாகத்தில் இஸ்லாமிய கொடிகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிராந்தியத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்துக்கு பிரெஞ்சின் உள்துறை அமைச்சர் பெர்னார் கசனவ் சென்றிருக்கிறார்.

பிரெஞ்சு நகைச்சுவை சஞ்சிகையான சார்ளி ஹெப்தோ மீதும் பாரிஸில் வேறு இடங்களிலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஐந்து மாதங்கள் கழித்து இன்றைய இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.