வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (12:17 IST)

லிபியாவில் உள்நாட்டுப் போர்: இந்தியர்கள் தாயகம் திரும்ப தூதரகம் அறிவுறுத்தல்

லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்தியர்கள் தாயகம் திரும்ப தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

லிபியாவில் 34 ஆண்டுகால கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

திரிபோலி விமானநிலையம் ஜிண்டான் போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் ஈருந்து வருகிறது. இதனால் இந்த விமானநிலையம் மீது இஸ்லாமிய போராட்டக்குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் பெங்காசி நகரின் மீதும் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

பெங்காசி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 59 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு திரிபோலியில் நடந்த தாக்குதலின்போது இருதரப்பினரும் ராக்கெட் மற்றும் பீரங்கி மூலம் தாக்கிக்கொண்டனர். தொடர் தாக்குதல் காரணமாக லிபியாவில் மோசமான நிலைமை நிலவுகிறது.

இந்நிலையில் லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியர்கள் தாயகம் திரும்ப இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து யாரும் லிபியாவுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லிபியாவில் செயல்படும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், லிபியாவில் தற்போது உள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெறும் நிலையில் திரிபோலி மற்றும் பெங்காசி பகுதிகளில் வசிக்க வேண்டாம் என்றும் லிபியா வாழ் இந்தியர்களுக்கு, அங்குள்ள தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

லிபியா தலைநகர் திரிபோலியில் மட்டுமின்றி பென்காசி உள்ளிட்டப் பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கேரளா மாநிலத்தை சேர்ந்த நர்சுகளும் அங்குள்ள மருத்துவமனையில் சிக்கியுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜிடம் கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி பேசியுள்ளார். இதற்கிடையே, ஆந்திர பிரதேச அரசும் சுஷ்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அங்கு சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை சொந்த நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர பிரதேச அரசு கேட்டுக் கொண்டுள்ளது.