வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (18:39 IST)

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத்

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அந்நாட்டு இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், ''காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு ஏற்படாத நிலையில், இந்தியாவுடன் நல்ல உறவு என்பது சாத்தியமற்றது. எனவே, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும்.
 
அதேபோல், பாகிஸ்தானில் உள்ள 'இஸ்லாமிஸ்ட்கள்' மீது தாக்குதல் நடத்துவது குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்திப்பின்போது திட்டமிடப்பட்டுள்ளது.
 
அந்த பேச்சு வார்த்தையின் போது இந்தத் திட்டம் குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்பமாகத்தான் தற்போது எல்லையில் பாகிஸ்தானியர் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது எனக் கூறியுள்ளார்.
 
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை, இந்தியா மற்றும் அமெரிக்கா தேடும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளன.