வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (17:21 IST)

”அமெரிக்காவை சுக்கு நூறாக்க ராணுவம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” - வடகொரியா அதிபர்

அமெரிக்காவை சுக்கு நூறாக்குவதற்கான பயிற்சியை ராணுவம் மேற்கொள்ள வேண்டும் என்று கிம் கூறியதாக வட கொரிய அரசுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை, சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் தென்கொரியாவும், அமெரிக்காவும் வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

 
இந்நிலையில், வட கொரிய அரசுச் செய்தி நிறுவனம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், போருக்கு தயாராகும்படி ராணுவத்திற்கு அறிவித்துள்ளதாகவும், இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வட கொரிய அரசுச் செய்தி நிறுவனம், ”பிளவுபட்ட கொரியாவை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான போரைத் தொடங்குவதற்கு காலம் நெருங்கிவிட்டது. அந்தப் போருக்காக கொரிய ராணுவம் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது. அவர்களை சமாளிக்க இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும்.
 
அமெரிக்காவை சுக்கு நூறாக்குவதற்கான பயிற்சியை ராணுவம் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.