வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (14:02 IST)

மோடியின் தொலை நோக்கு திட்டம் இந்திய – அமெரிக்க உறவை வலுப்படுத்தும் - ஜான் கெர்ரி

நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்தியா – அமெரிக்கா இடையேயான 5வது கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் நடைபெறுகிறது. அதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி பங்கேற்கிறார். மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுகிறார்.
 
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து ஜான் கெர்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
அமெரிக்கா இந்தியாவின் புதிய அரசுடன் நட்புறவுடன் தோழமையாக இருக்க தயாராக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சியை உருவாக்குவோம். ’சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற புதிய திட்டத்துடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது.
 
தேர்தல் பிரசாரத்தின் போதும் இதே கோஷத்தை தான் அவர் ஒலித்தார். அவரின் இந்த திட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இது அவரது மிகப்பெரிய தொலை நோக்கு திட்டமாகும். எங்களது தனியார் நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க கிரியா ஊக்கியாக செயல்பட ஆவலாக உள்ளன.
 
கட்டமைப்பு வசதி, சுகாதார மேம்பாடு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடையவும், அதன் மூலம் மக்கள் மேம்பாடு அடையவும் அமெரிக்க முன்னணி நிறுவனங்கள் தயாராக உள்ளன.
 
ஆண்டு தோறும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 1 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்க கல்வி நிறுவனங்கள் 21 ஆம் நூற்றாண்டிற்குரிய திறமை வாய்ந்த பயிற்சிகளை அளித்து வருகின்றன.
 
இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கல்வி மேம்பாட்டுக்கான ஒப்பந்த மேலும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் இளைஞர்கள் பலன் பெறுவர். தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய இளைஞர்களின் சக்தியை நரேந்திர மோடி கவர்ந்தார்.
 
உலகிலேயே இந்தியா பழமைவாய்ந்த பண்பாடு மற்றும் நாகரீகத்தை கொண்டது. மேலும் அதிக இளைஞர்களையும் உள்ளடக்கியது. அவர்களின் சக்தியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
 
இவ்வாறு ஜான் கெர்ரி பேசினார்.