வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 26 ஜூலை 2014 (14:29 IST)

காஸா மீதான தாக்குதலை 12 மணி நேரம் நிறுத்திக்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல்

காஸா பகுதியில் 12 மணி நேரம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், காஸா முனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் இயக்கத்தவர்களுக்கும் இடையேயான சண்டை 19ஆவது நாளை எட்டியது. சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்க மறுத்து தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.
 
இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 884 ஆனது. ஹமாஸ் இயக்கத்தவர்களை குறி வைத்து நடத்தும் தாக்குதல்கள் முழு வீச்சில் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார்.
 
பேச்சுவார்த்தை தொடரும் வகையில் 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இருந்தார். இந்தக் கோரிக்கையை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை நிராகரித்தது.
 
இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கெய்ரோவில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், எகிப்து வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
 
இந்த நிலையில், காஸா பகுதியில் 12 மணி நேரம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று காலை தொடங்கியது என்று ராணுவம் அறிவித்துள்ளது.
 
ஹமாஸ் இயக்கத்தவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் மீது தக்குதல் நடத்தினால் நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
 
பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கடந்த 19 நாள் தாக்குதலில் 884 மக்கள்  கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இஸ்ரேல் தரப்பில், இதுவரை 38 வீரர்கள் பலியாகியுள்ளனர்.