வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (15:24 IST)

இஸ்ரேலுக்கு வெடி குண்டுகளை வழங்கியது அமெரிக்கா

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வெடி குண்டுகளை வழங்கியதாக அந்நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜான் கிர்பி கூறியதாவது:-

“இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. அந்நாட்டின் வளர்ச்சி, பலமான சுய பாதுகாப்பு ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு இன்றியமையாதது.

அமெரிக்காவுடனான ஆயுத கொள்முதல் ஒப்பந்தப்படி, தங்களுக்கு ஆயுதங்கள் வேண்டி கடந்த மாதம் 20 ஆம் தேதி இஸ்ரேல் கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு, 3 நாள்களுக்குப் பிறகு கையெழுத்திடப்பட்டது.

பின்னர் இஸ்ரேலின் ஆயுதக்கிடங்குகளுக்கு கையெறி குண்டுகளும், ராக்கெட் குண்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் சட்டத்திற்கு உள்பட்டு, கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் வழங்கப்படுவதற்கு வெள்ளை மாளிகையின் அனுமதி தேவையில்லை.

முன்னதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மோஷே யாலோனுடன் பேசியிருந்தார்.

அப்போது, "இஸ்ரேலின் பாதுகாப்புக்கும், அதன் உரிமைகளை அந்நாடு நிலைநாட்டுவதற்கும் அமெரிக்கா உதவும் என்று சக் ஹேகல் உறுதியளித்திருந்தார்.

மேலும், பாலஸ்தீனம்-இஸ்ரேலுக்கு இடையேயான 2012 ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தின் படி, மனிதாபிமான அடிப்படையில் நிரந்தரமான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

காஸா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் மற்றும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் அழிக்கப்பட்டால் மட்டுமே இரு நாடுகளிடையேயான சண்டை முடிவுக்கு வரும் என்றும் சக் ஹேகல் தெரிவித்திருந்தார்“ என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், காஸாவில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளதாம்.