வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (15:26 IST)

அமெரிக்க பத்திரிகையாளர் படுகொலை வீடியோ: அமெரிக்கா கண்டனம்

'அமெரிக்காவுக்கு ஒரு தகவல்' என்ற தலைப்பில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் சில நகரங்களையும் ஈராக்கின் நகரங்களையும் இணைத்து 'இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற தனி நாடு அமைக்கும் திட்டத்தோடு தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
 
கடந்த ஜூன் மாதம் முதல் முதல் ஈராக் அரசுப் படைக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் சண்டை தீவிரமடைந்துள்ளது. அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூல் தொடங்கி, முக்கிய நகரங்கள் பலவற்றை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர்.
 
இதனால், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்க, அமெரிக்காவின் உதவியை ஈராக் நாடியது. அமெரிக்க ராணுவம் மற்றும் குர்திஷ் அமைப்பு ராணுவத்தின் வான்வழித் தாக்குதாலால் ஈராக்கின் மிகப்பெரிய மொசூல் அணை மீட்கப்பட்டது. அங்கிருந்த கிளர்ச்சியாளர்களின் தளவாடங்கள் பலவும் அழிக்கப்பட்டன.
 
இந்த நிலையில், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க புகைப்பட நிருபர் ஜேம்ஸ் ஃபோலே என்பவரின் தலை துண்டிக்கப்படுவது போன்ற வீடியோ பதிவை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
 
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தை ஒளிப்பரப்பும் விதமாக தொடங்கும் வீடியோவின் அடுத்தக் காட்சியில், 'அமெரிக்காவுக்கு ஒரு தகவல்' என்ற தலைப்பு வருகிறது.
அதில், அமெரிக்க பத்திரிகையாளர் ஃபோலே, ஜிகாதிகளுக்கு நடுவே மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். அப்போது ஃபோலே தனது குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க அரசுக்கு கூறுவதாக, "எனது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் என்னை கொல்பவர்களுக்கு எதிராக எழ வேண்டும். இவர்கள் என்னை கொல்வதனால் ஏற்படும் கொடூரத்தை கொண்டு தன்னிறைவு அடைய எண்ணுகிறார்கள். அமெரிக்க ராணுவம் ஈராக்கில் குண்டு மழை பொழிந்தபோதே, எனது இறப்பு சான்றிதழுக்கு இவர்கள் கையெழுத்திட்டுவிட்டனர்" என்று உருக்கமாக பேசுகிறார்.
அடுத்த பக்கம்..

பின்னர் ஜேம்ஸ் ஃபோலேவின் தலையை கத்தியால் அறுப்பது போன்ற காட்சிக்கு முன்பாக, அவரது கழுத்தைப் பிடித்தபடி அந்த வீடியோவில் கிளர்ச்சியாளர்களுள் ஒருவர் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
 
அதில், "இவர்தான் ஃபோலே, உங்கள் நாட்டின் குடிமகன். உங்கள் அரசு, எங்களது 'இஸ்லாமிக் ஸ்டேட்'-டுக்கு எதிரான நடவடிக்கைகள் பலவற்றை செய்துவிட்டன. நீங்கள் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு வருகிறீர்கள். எங்களது விவகாரங்களில் தலையீடு செய்கிறீர்கள். தலையீடு செய்ய காரணங்களை தேடிக்கொள்கிறீர்கள்.
 
ஈராக்கில் தினம் தினம் உங்களது ராணுவம், எங்கள் மீதான தாக்குதல்களை நடத்துகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். நீங்கள் இந்த நாடு எழுச்சிப் பெற இங்கு தாக்குதல் நடத்தவில்லை. நாங்கள் இஸ்லாமிய போராளிகள், எங்களது இஸ்லாமிய கலிப்பேட் கோரிக்கைக்கு, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களின் ஆதரவு உள்ளது.
 
எனவே உங்களது (அமெரிக்கா) முயற்சிகள் முறியடிக்கப்படும். இஸ்லாமியர்கள் தங்களுக்கான தனி நாட்டில் உரிமைகளை பெற்று வாழ நினைப்பதை நீங்கள் தடுக்க நினைத்தால் உங்களது மக்களை நாங்கள் ரத்ததால் மூழ்கச் செய்வோம்" என்கிறார்.
 
இதனிடையே, வீடியோ பதிவில் இருப்பது ஜேம்ஸ் ஃபோலேதான் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி டியான் ஃபோலே கூறும்போது "அவர் தனது வாழ்க்கை முழுவதையும், சிரியாவில் நிலவும் அவலங்களை உலகிற்கு கூறவே அர்ப்பணித்தார்" என்று கூறியுள்ளார்.
 
ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிட்டுள்ள வீடியோ பதிவு குறித்து அமெரிக்க அரசு தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த வீடியோ பதிவு உண்மையானதா என்று ஆராய வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறும்போது, "அதிபர் ஒபாமா, இந்த வீடியோ குறித்து ஆலோசித்து வருகிறார். இது தொடர்பான தகவல்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து வருகிறார். ஒருவேளை, இந்த வீடியோ உண்மையானது எனில், இதற்கு அமெரிக்கா தனது கண்டனத்தைக் கடுமையாகப் பதிவு செய்யும்.
இதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் மனிதாபிமானம் அற்றவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் மோசமானவர்கள் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி" என்று அவர் கூறினார்.