1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (03:14 IST)

ஈராக்கில் 111 சிறுவர்களை கடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஈராக்கில் 111 சிறுவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈராக்கில் உள்ள பல முக்கிய இடங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் போராட்டத்திற்கு பின்பு கைப்பற்றியுள்ளனர். இதனால், இந்தப் பகுதியில் இவர்களது ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது.
 
இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை திடீரென கடத்திச் சென்று வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். 
 
இது குறித்து ஈராக் குர்திஸ்தான் ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாத பயிற்சி கொடுக்கவே கடத்தப்பட்டுள்ளனர் என்றார்.
 
தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இதை எல்லாம் தீவிரவாதிகள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.