வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 மே 2015 (05:38 IST)

மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டி நிலவுகிறதா?

ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தங்களது ராணுவ பலத்தை கணிசமாகப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கத்தாரும் கூடத்தான். அதே போல சௌதி அரேபியா புதிய வகை ராணுவ தளவாடங்களில் முதலீடுகளைச் செய்து கொண்டிருக்கிறது.


 
தற்போது கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி பிரான்ஸ்,கத்தாருக்கு 2018ல் 24 ரஃபேல் போர் விமானங்களை விற்கிறது.
 
வளைகுடா நாடுகள் ஒரு ஆயுதப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றன, ஆனால் அது ஒரு ஒருவழிப்பாதை” என்று கூறுகிறார், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கழகம் என்ற ஆய்வு நிறுவனத்தில் ஆயுத மற்றும் ராணுவ செலவின்ங்களைப் பற்றி ஆய்வு செய்யும், பீட்டர் வெஸிமான்.
 
வளைகுடா நாடுகளில் அரபுத் தரப்பு ஏராளமான அளவு பணத்தை ஆயுதங்கள் வாங்குவதில் செலவு செய்து கொண்டிருக்கிறது. கத்தார் ஒரு நல்ல உதாரணம். சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள் இந்த விஷயத்தில் முக்கிய நாடுகள் என்று பிபிசியிடம் தெரிவித்தார் வெஸிமான்.



உள் நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ வரும் கிளர்ச்சியை அடக்குவதுதான் இந்த ராணுவ முதலீடுகளின் இலக்கு என்று கூறுகிறார் வெஸிமான்.
 
யேமன், இராக் அல்லது சிரியா போன்ற நாடுகளில் நடக்கும் மோதல்கள் தங்கள் நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்று அரபு நாடுகள் அஞ்சுகின்றன.



இரான் ஒரு அச்சுறுத்தல் என்ற ஒரு உணர்வு நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. இரானை இந்த நாடுகள் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கின்றன, என்று கூறுகிறார் வெஸிமான்.
 
இரானை மிரட்டுவதற்காகத்தான் இந்த ஆயுதங்கள்", என்கிறார் அவர்.
ஆனால் இது சற்று விநோதமான கருத்து ஏனென்றால் இது போன்று அரபு நாடுகள் வைத்திருக்கும் அதி உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வாங்கத் தேவையான பணமோ அல்லது அதைப் பெற்றுத்தரும் தொடர்புகளோ இரானுக்கு உண்மையில் இல்லை, என்று கூறுகிறார் வெஸிமான்.
 
இரானின் ஷியாத் தலைமைக்கும், எண்ணெய் வளத்தால் செல்வம் கொழிக்கும் சுன்னிப் பிரிவு நாடுகளுக்குமிடையே, யார் பெரியவர் என்ற சண்டை இந்தப் பிராந்தியத்தில் நிலவுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்தப் பிரதேசத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழல் இப்போது இந்த ராணுவ மயமாக்கும் வழிமுறையை வேகப்படுத்துவது போல் தோன்றுகிறது.
 
பொருளாதார ரீதியில் பார்த்தால், வெற்றி பெறுவது என்னவோ மேற்கத்திய நாடுகள்தான். இந்த ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் அவைகளுக்குத்தான் பல பிலியன் டாலர்கள் லாபம்.
 
அரபு நாடுகளுக்கு செய்யப்படும் ஆயுத விற்பனையில் பெரும்பாலான விற்பனை அமெரிக்காவிடமிருந்துதான் வருகிறது. ஆனால் பிரிட்டனும், பிரான்சும், பிற ஐரோப்பிய நாடுகளும்கூட விற்பனை செய்யும் முக்கிய நாடுகள்தான்.