1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 29 நவம்பர் 2014 (17:42 IST)

அமெரிக்காவில் அனாதையாகக் கிடந்த 62 லட்சம் ரூபாயை காவல் துறையிடம் ஒப்படைத்த இந்தியர்

அமெரிக்காவில், இந்தியர் ஒருவர் தனது உணவகத்தில் அனாதையாகக் கிடந்த 62 லட்சம் ரூபாயை காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
 
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில், அல்டாப் சாஸ் என்னும் இந்தியர் ஒருவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில், உணவருந்திவிட்டுச் சென்ற யாரோ ஒருவர், நாற்காலியின் மீது தான் கொண்டுவந்த பையை விட்டுச் சென்றுள்ளார். அந்த பையை உணவக உரிமையாளர் அல்டாப் சாஸ் எடுத்து வைத்திருந்துள்ளார்.
 
அன்றைக்கு அவருடைய பிறந்தநாள் என்பதால், சீக்கிரம் வீடு திரும்ப நினைத்துள்ளார். ஆனால், அந்தப் பையை கேட்டு யாரும் வராததால், எதேச்சையாக அந்தப் பையில் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் திறந்து பார்த்துள்ளார். அதில், 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.61 லட்சம்) டாலர் நோட்டுக் கட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைக் கண்டதும், உடனடியாக கலிஃபோர்னியா காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களிடம் விட்டுச் சென்றப் பணத்தை ஒப்படைத்துள்ளார்.
 
இது குறித்து அல்டாப் சாஸ் கூறுகையில், 'நான் 26 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வந்தேன். வியர்வை சிந்தி சம்பாதிக்க வேண்டும். வியர்வை சிந்தாமல் வருகிற பணம், நமது பணம் அல்ல. நான் பணத்தை பார்த்து சபலப்பட மாட்டேன்” என்றார்.
 
அந்த பையின் சொந்தக்காரரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.