வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (18:09 IST)

இஸ்ரேலுக்கு எதிரான போர்குற்ற விசாரணை; இந்தியா ஓட்டெடுப்பில் புறக்கணிப்பு

பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்கள் தொடர்பாக நடைபெற்ற ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
 
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பிரச்னை கடந்த 1967ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 'ஆபரேசன் புரடெக்டிவ் எட்ஜ்' என்ற பெயரில் இஸ்ரேல் வான் வழியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
 
ஏழு வாரங்கள் நடந்த இந்த போரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் பாலஸ்தீனம் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது.
 
இஸ்ரேல் போர் குற்றம் நடத்தியது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஐ.நா. விசாரணை கமிஷன் அமைக்க கோரும் ஓட்டெடுப்பு, ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அமைப்பில் நடந்தது. 41 நாடுகள் ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிராக ஓட்டளித்தன.
 
இந்த ஓட்டெடுப்பில் இந்தியா, கென்யா, எத்தியோபியா, பராகுவே, மாஸிடோனியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2016ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இஸ்ரேல் செல்ல இருப்பதால் ஒட்டெடுப்பை புறக்கணித்ததாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.