1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 23 டிசம்பர் 2014 (05:10 IST)

"நான் இறந்தால், மரணம் என்னோடு முடிய வேண்டும்" - பிணத்திலிருந்து பரவும் எபோலோ குறித்து மருத்துவர் உரை

பிணத்திலிருந்து பரவும் எபோலோ குறித்து சியாரா லியோன் மருத்துவர், நான் இறந்தால், மரணம் என்னோடு முடிய வேண்டும் என்று வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார்.
 
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சியாரா லியோனில் மட்டும் இதுவரை 2000 பேர் எபோலாவால் இறந்திருக்கின்றனர். இதில் 70 சதவீதத்தினர் பாதுகாப்பற்ற அடக்கம் செய்யும் முறையால் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.
 
சமீபத்தில் இறந்தவர்களின் உடல்களிலிருந்தும் எபோலொ நோய் பரவுவதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. உயிருடன் இருக்கும் மனிதரை விட இறந்த மனிதரிடமிருந்து எபோலா பரவ 10 மடங்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
 
அதனால், சியரா லியோனில் எபோலாவால் இறந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் தொடுதல் அல்லது கழுவுதல் போன்ற பாரம்பரிய அடக்கம் செய்யும் முறைகளை கைவிட வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
 
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டாக்டர் டெஸ்மாண்ட் வில்லியம்ஸின் பேச்சு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய வில்லியம்ஸ், “நான் இறந்தால், மரணம் என்னோடு முடிய வேண்டும். நான் இறக்கும் போது என் உடலை என் குடும்பத்தினர் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான, மருத்துவ அடக்கம் செய்ய வேண்டும்” என்று அவர் தனது வானொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.