வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (12:32 IST)

நியூயார்க் மருத்துவருக்கு எபோலா பாதிப்பு

கினியாவில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நியூயார்க்கைச் சேர்ந்த கிரேக் ஸ்பென்சர் என்ற மருத்துவருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
மருத்துவர் கிரேக்கிற்கு எபோலா தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சோதனை முடிவை உறுதிப்படுத்த நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
 
எபோலா தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பவருக்கு அந்நோயின் அறிகுறி 8 முதல் 10 நாட்களில் தெரியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கினியாவில் இருந்து நியூயார்க் திரும்பிய மருத்துவர் கிரேக்கிற்கு 9 நாட்கள் கழித்து எபோலா அறிகுறிகள் கணப்பட்டன. 
 
உடல்நிலை பாதிப்பு குறித்து மருத்துவர்களுக்கு தெரிவித்த கிரேக்கை உடனடியாக பெல்லவ் மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவ பணியாளர்கள், கிரேக் மூலமாக மற்றவர்களுக்கு எபோலா பரவியிருக்க வாய்ப்புள்ளதால் தீவிரமாக அவர்களைத் தேடி வருகின்றனர். 
 
மேற்கு ஆப்பிரிக்காவில் பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கிய எபோலா, நியூயார்க் நகரைத் தாக்கினால் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவ குழுவினர் மற்றும் அரசு நிர்வாகத்தினர் ஆலோசனை மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளனர்.
 
எபோலா தாக்கிய பின் மன்ஹாட்டனில் இருந்து ப்ரூக்லினுக்கு பயணித்த கிரேக் பின்னர் ஒரு டாக்சி மூலம் வீடு திரும்பியுள்ளார். அடுத்த நாள் காலை அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டபோதும் அவர் பொது இடங்களில் இருந்துள்ளார்.
 
எபோலா வைரஸ் பாதிப்பு உடல் திரவங்கள் மூலம் பரவும், காற்று மூலம் பரவாது என்ற போதிலும் எபோலா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.