1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 ஜூலை 2014 (14:57 IST)

செப்டம்பர் மாதத்துடன் நிறுத்தப்படுகிறது கூகுளின் ஆர்குட்

கூகுள் நிறுவனத்தின் சமூக இணைய தளமான ஆர்குட்டை 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் சமூக இணைய தளமான ஆர்குட் கடந்த 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது நல்ல முன்னேற்றத்தையையே கண்டது. ஆனால் அதே ஆண்டு பேஸ்புக் இணைய தளமும் பயன்பாட்டுக்கு வந்ததால், ஆர்குட்டின் பயன்பாடு குறையத் தொடங்கியது.

2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரேசிலிலும், இந்தியாவிலும் மட்டுமே இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துபவர்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை ஆர்குட்டைவிட அதிகரித்தது. அதேபோல் 2012 ஆம் ஆண்டில் பிரேசிலிலும் பேஸ்புக் முதலிடம் பெற்றது.

பேஸ்புக் போட்டியை எதிர்கொள்வதற்காக கூகுள்+ஐ அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் கூகுள் நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இப்போதும் லட்சக்கணக்கானோர் ஆர்குட்டைப் பார்வையிடுகின்றனர் என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

இணையதளத் தகவல் வெளியீட்டின்படி 50 சதவிகித ஆர்குட் பயனாளர்கள் பிரேசிலிலும், 20 சதவிகிதப் பயனாளர்கள் இந்தியாவிலும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் இந்த தளத்தை மூட இருப்பதாக ஆர்குட்டின் பொறியியல் இயக்குனரான பாலோ கோல்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது உள்ள பயனாளார்கள் தங்களின் தகவல் பக்கங்களை பரிமாறிக்கொள்ள முடியுமே தவிர புதிய வருகைகள் நிறுத்தப்படும்.

கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் யூ டியூப், பிளாகர், கூகுள்+ போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஆர்குட்டைவிட அதிக வளர்ச்சி வாய்ப்பைப் பெற்றுவிட்டதால் ஆர்குட் தளத்திற்குப் பிரியாவிடை அளிக்க முடிவு செய்துள்ளோம்" என்று பாலோ கோல்கர் தெரிவித்துள்ளார்.