வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 17 டிசம்பர் 2014 (18:00 IST)

பெஷாவரில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள்

பெஷாவரில் பள்ளிக்கூட தாக்குதலில் இறந்தவர்களுக்காக உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 

மாணவர்களுக்கான இறுதிச் சடங்குகள்..
 
இறந்தவர்களின் சவப்பெட்டிகளின் மீது மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான்கள் நடத்தியதிலேயே மிக மோசமான தாக்குதல் சம்பவமான இதில், துப்பாக்கிதாரிகள் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவர்களைச் சுட்டுக்கொன்றனர்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கண்டனம் எழுந்திருக்கும் நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மூன்று நாட்கள் துக்கம் அறிவித்திருக்கிறார். பயங்கரவாதக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு இருந்த தடையையும் அவர் நீக்கியுள்ளார்.
 

தாக்குதலில் காயமடைந்த மாணவர்..
 
உலகத் தலைவர்கள் அனைவரும் இந்தச் சம்பவம் தொடர்பாக தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஃப்கன் தாலிபான்கள் கூட இதனை விமர்சித்துள்ளனர்.
 
நேற்றே இறந்தவர்களைப் புதைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இறந்தவர்களுக்கு உலகெங்கிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகிறது. இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் அடுத்தப் பக்கம்...

இந்தியாவின் ஆழ்ந்த வருத்தங்களை இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். "இன்று இந்தக் குழந்தைகள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்ததிற்கும் பழிவாங்குவோம்" என நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைப் பெற்றுவரும் மாணவர்கள்..
 
உலகெங்கிலும் இருக்கும் பாகிஸ்தானியத் தூதரங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக இம்மாதிரி ஒரு தாக்குதலை நடத்தும் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் முகமது குரஸனி தெரிவித்துள்ளார்.
 
தாலிபான் போராளிகளின் குழந்தைகளையும் பெண்களையும் ராணுவம் கொன்றதாகவும் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கைபர், வடக்கு வரிசிஸ்தான் பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான தாலிபான் வீரர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 

இந்தியப் பள்ளி ஒன்றில் அஞ்சலி செலுத்தும் மாணவர்கள்..
 
ஆஃப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள், இந்த பள்ளிக்கூடத் தாக்குதல் இஸ்லாமுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு தங்களது அஞ்சலிகளையும் வருத்தங்களையும் தெரிவிப்பதாக, ஆஃப்கன் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
 

அஞ்சலி செலுத்தும் பாகிஸ்தான் பள்ளி மாணவர்கள்..
 
பாகிஸ்தான் பள்ளியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டன.