1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 ஜனவரி 2015 (16:56 IST)

அணுஆயுத ரகசியத்தை வெனிசுலாவிற்கு அளிக்க முயன்ற விஞ்ஞானிக்கு ஐந்தாண்டு சிறை

அணுஆயுதம் செய்யும் ரகசியத்தை வெனிசுலா நாட்டுக்கு அளிக்க முயன்ற குற்றத்திற்காக விஞ்ஞானி ஒருவருக்கு அமெரிக்காவில் ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
 
பெத்ரோ லெனார்டோ மாஸ்கெரோனி என்ற அந்த விஞ்ஞானி, 2013ஆம் ஆண்டில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வெனிசுலா நாட்டு அதிகாரியைப் போல நடித்த எஃப்பிஐ அதிகாரியிடம் ரகசியத்தைத் தருவதாக இவர் கூறியிருந்தார்.
 

 
79 வயதாகும் பெத்ரோ மாஸ்கெரோனி அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். இவரது மனைவிக்கும் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக மாஸ்கெரோனியிம் விசாரணை நடத்தப்பட்டு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
 
அடுத்த பத்து ஆண்டுகளில் வெனிசுலா அணு ஆயுதம் செய்வதற்குத் தன்னால் உதவமுடியும் என வெனிசுலா நாட்டு அதிகாரியாக நடித்த எஃப்பிஐ அதிகாரியிடம் மாஸ்கெரோனி கூறியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
 
புளுட்டோனியத்தைத் தயாரித்து செறிவூட்டுவதற்காக ஒரு ரகசிய அணு உலையையும் மின்சாரம் தயாரிக்கும் அணு உலையையும் வெனிசுலா அமைக்க முடியும் என மாஸ்கெரோனி கூறியிருந்தார்.
 
லாஸ் ஆலமோஸ் லபோரட்டரியில் அணு ஆயுதங்களை வடிவமைக்கும் பிரிவில் சுமார் பத்தாண்டுகள் மாஸ்கெரோனி பணியாற்றியுள்ளார். இந்த ஆய்வகத்தில்தான் முதல் அணுஆயுதம் தயாரிக்கப்பட்டது.
 
1988ல் லாஸ் ஆலமோஸ் ஆய்வகத்திலிருந்து மாஸ்கெரோனி பணிநீக்கம் செய்யப்பட்டார். இவருடைய மனைவி, அங்கே தொழில்நுட்ப எழுத்தராகப் பணியாற்றியவர்.
 
தற்போதைய முறையைவிட தூய்மையான அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இவருடைய திட்டத்தை லாஸ் ஆலமோஸ் ஆய்வகமும் நாடாளுமன்ற அதிகாரிகளும் நிராகரித்துவிட்ட பிறகு, பிற நாடுகளை தான் அணுகியதாக அஸோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் மாஸ்கெரோனி கூறியிருந்தார்.
 
ஹைட்ரஜன் ஃப்ளோரைடு லேசரின் மூலம் அணு மின்சாரத்தை உருவாக்க முடியும் என்ற தன்னுடைய சித்தாந்தத்தை அமெரிக்கா நிராகரித்த பிறகு, தான் வெனிசுலாவை அணுகியதாக மாஸ்கெரோனி தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க அணுசக்தி ரகசியங்களை வெனிசுலா அறிய முயன்றது என தாங்கள் நம்பவில்லையென அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.