1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 27 ஆகஸ்ட் 2014 (16:22 IST)

அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய போலி சாமியார்

அமெரிக்காவில் பக்தர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திய போலி சாமியார், மோசடி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). இவர் டாக்டர் கமாண்டர் செல்வம், சுவாமிஜி சித்தர் செல்வம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தார். இவர் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு இந்துக்கோவிலை நிறுவி நடத்தி வந்தார். இதனால் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. அங்கு பக்தர்கள் குவிந்தனர். 
 
பக்தர்களுக்கு ஆன்மிக சேவையுடன், குறி பார்த்து சொல்லுதல், காதல் விவகாரங்களுக்கு தீர்வு கூறுதல், குடும்ப தகராறினை தீர்த்து வைத்தல், தொழில்வியாபார முடக்கம் தீர்த்து வைத்தல் உள்பட பல்வேறு சேவைகளை வழங்குவதாக கூறினார். இப்படி தான் வழங்குகிற ஒவ்வொரு சேவைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக நிர்ணயித்து வசூலித்து வந்தார். ஆனால் அவர் பக்தர்களுடன் பேசி ஒப்புக்கொள்ளப்பட்ட தொகைக்கும் அதிகமாக, அவர்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுத்துவந்துள்ளார். இது தொடர்பாக பிரச்சனை எழுந்தபோது, போலி கணக்கினை தருவாராம். பக்தர்களிடம் இப்படி சுருட்டிய பணத்தைக் கொண்டு, இந்தியாவில் கார்கள், பங்களாக்கள், சொத்துகள் என வாங்கிக்குவித்துள்ளார். உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.
 
இந்த நிலையில், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் அவரை ஜார்ஜியா காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது வங்கி மோசடி, சட்டவிரோத பணபரிவர்த்தனை, கோவில் பணத்தை கொண்டு தன் தனிப்பட்ட வாழ்க்கையை உல்லாசமானதாக மாற்றிக்கொண்டது, போலி வருமான கணக்கு தாக்கல் செய்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.