வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (22:35 IST)

ஃபேஸ்புக் மார்க்-இன் 2வது குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சம்பர்பெர்க் -பிரிசில்லா தம்பதிக்கு நேற்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்துள்ளதால் இந்த குழந்தைக்கு 'ஆகஸ்ட்' என்றே மார்க் தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர்.



 
 
இந்த நிலையில் புதியதாக பிறந்த குழந்தைக்கு மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
டியர் ஆகஸ்ட்,
 
இந்த உலகிற்கு உன்னை வரவேற்கிறோம். நானும், உன் தாயும் நீ என்ன ஆகப்போகிறாய் என்பதை காண ஆவலாய் இருக்கிறோம்.
 
உன் சகோதரி பிறந்த போது உனக்கான உலகம் எப்படி இருக்கப்போகிறது என்ற கடிதம் ஒன்றை எழுதினோம். இப்போது அந்த உலகம் வளர்ந்து வருகிறது. நீ காணும் உலகில் நல்ல கல்வி, குறைவான எண்ணிக்கையில் நோய்கள், வளமான சமூகம் மற்றும் சமத்துவம் ஓங்கி இருக்கும். அறிவியல் தொழில்நுட்பத்தில் உள்ள மேம்பாடுகள் குறித்து எழுதியிருந்தோம். உன் தலைமுறை எங்களுடைய தலைமுறையை விட சிறப்பானதாக இருக்கும். அதனை உருவாக்கித் தருவதில் எங்களின் பங்கு அதிகமாக உள்ளது.  இன்றைய தலைப்பு செய்திகள் தவறாக இருந்தாலும், அதனை சரியாக மாற்ற வேண்டியது எங்கள் கடமை. உனது தலைமுறையை செம்மையாக்குவது தான் எங்களது வேலை.
 
ஆனால், உன் எதிர்காலத்தை பற்றி எழுதுவதை விட உன் குழந்தைப்பருவம் பற்றி பேச வேண்டியது அவசியம். உலகம் தற்போது உள்ள மோசமான சூழலில் நீ வெளியில் சென்று விளையாட சாதகமான சூழல் இப்போது இல்லை. அதனை ஏற்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
 
நீ வளர்ந்த பின்பு  பிஸியாகி விடுவாய். அதனால் இப்போது நீ பூக்களின் வாசம் நுகர வேண்டும், இலைகளின் பசுமை அறிய வேண்டும். நீ மேக்ஸுடன் சேர்ந்து புத்தகங்களைப் படிக்க வேண்டும், வீட்டின் எல்லாப் பக்கங்களின் தவழ்ந்து விளையாட வேண்டும். மேலும் நீ நிறைய தூங்குவாய் என நினைக்கிறேன். உன் கனவிலும் நாங்கள் உன்னை எவ்வளவு அன்போடு பார்த்துக்கொள்கிறோம் என்பது உனக்கு தோன்றும் என நம்புகிறேன்.
 
குழந்தைப்பருவம் என்பது அதிசயமானது. ஒருமுறைதான் நமக்கு அது கிடைக்கும். அதனால் எதிர்காலத்தை குறித்து கவலைப்படாமல் குழந்தைப்பருவத்தை அனுபவி. உன் எதிர்காலத்தை நாங்கள் கவனித்து கொள்கிறோம்.  உனக்கு மட்டுமல்லாமல் உன் தலைமுறை குழந்தைகள் அனைவருக்குமான சிறந்த உலகை உருவாக்குவோம்.
 
ஆகஸ்ட் உன்னை அதிகம் நேசிக்கிறோம். உன்னுடனான ஆச்சர்யங்களுக்குக் காத்திருக்கிறோம். உன் வாழ்க்கை மகிழ்வாக அமைய வாழ்த்துகிறோம். நீ தந்த மகிழ்ச்சியை நாங்கள் உனக்குத் திரும்பத் தருவோம்.
 
அன்புடன்
 
அம்மா, அப்பா
 
இவ்வாறு மார்க் நெகிழ்ச்சியுடன் தனது கடிதத்தை முடித்துள்ளார்