வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 13 ஆகஸ்ட் 2014 (10:53 IST)

நைஜிரியாவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மருத்துவர்கள்

எபோலா வைரஸ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நைஜிரியாவில் இருந்து வெளியேற இந்திய மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கொடிய நோயான எபோலா வைரஸ் நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பரவிவரும் எபோலா வைரஸ் தாக்குதலால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நோய் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் தாக்கும் அபாயம் உள்ளதாலும், சிகிச்சைக்கான சரியான மருந்து கண்டுபிடிக்காத நிலையும் உள்ளதாலும் பலி எண்ணிக்கை விரைவாக உயர்ந்து வருகிறது. எபோலா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், எபோலா வைரஸ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நைஜிரியாவில் இருந்து வெளியேற இந்திய மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, இந்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நைஜீரியா தலைநகர் அபுஜாவில் இந்தியர்கள் நடத்தி வரும் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு இந்திய மருத்துவர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் தங்களது பாஸ்போர்ட்டை மருத்துவமனை நிர்வாகம் வாங்கி வைத்துக் கொண்டுள்ளது என்றும் தொடந்து இங்கு பணிபுரிய கட்டாயப்படுத்தப்படுகிறோம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அந்த மருத்துவமனை மருத்துவர்களுள் ஒருவர், ‘நாங்கள் யாரையும் இங்கு தங்கும்படி கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

எங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சுமார் 25 நோயாளிகளுக்கு இந்திய மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது, இவர்களை அப்படியே விட்டுவிட்டு இந்தியாவுக்கு சென்றுவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் இங்கேயே இருந்து வேலை செய்யுமாறு நான் கூறினேன். அவர்களது பாஸ்போர்ட்டை நாங்கள் கைப்பற்றவில்லை.

நாம் எல்லோரும் மருத்துவர்கள். சட்டப்படியும், தொழில் தர்மத்தின்படியும், நம்மை நம்பியிருக்கும் நோயாளிகளை கைவிட்டு விட முடியாது. இதனால் இந்தியாவுக்குதான் கெட்டப் பெயர் வரும் என்று நான் அவர்களிடம் கூறினேன்.

எபோலா வைரஸ் சர்வதேச பிரச்சனை, ஆனால் அபுஜாவில் யாருக்கும் இந்த நோய் இல்லை. எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள லாகோஸ் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தூரத்தில் எங்கள் மருத்துவமனை உள்ளது“ என்று கூறியுள்ளார்.