வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (13:47 IST)

போபால் விஷவாயு வழக்கின் முக்கியக் குற்றவாளி வாரன் ஆன்டர்சன் மரணம்

போபால் விஷவாயு வழக்கின் முக்கியக் குற்றவாளியும், அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவருமான வாரன் ஆன்டர்சன் (92) இன்று (31.10.14) காலமானார்.
 
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த ஆலையிலிருந்து 1984 டிசம்பர் 2ஆம் தேதி திடீரென விஷவாயு கசிந்தது. போபால் நகரம் முழுவதும் இந்த விஷவாயு பரவியதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறி பலியாயினர்.
 

 
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து இதுதான். மேலும் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மூச்சுத்திணறல், கண் பார்வை பாதிப்பு, முடங்கிப் போய் உயிர்இழப்பு என்று சோகங்கள் தொடர்ந்தன. அமெரிக்கக் கம்பெனி நிர்வாகம் அன்று ஏதும் கண்டு கொள்ளவில்லை. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இரு ஆண்டுகள் ஆனது. தொழிற்சாலை விபத்து என்று எளிமையாக வர்ணிக்கப்பட்ட இந்த பயங்கரம், கறுப்பு நாளாக இந்தியாவுக்கு அமைந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட வாரன் ஆன்டர்சனை நீதிமன்றம் விடுவித்தது.
 

 
இவர் போபால் விஷவாயு கசிவு நிகழ்ந்த நேரத்தில், மாநில அரசின் விமானத்தில்தான் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்றார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
 
கடந்த 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 92 வயதடைந்த இவர் இன்று மரணமடைந்ததாக நியூயார்க் செய்தி தெரிவிக்கிறது.