வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 டிசம்பர் 2018 (10:49 IST)

429 பேர் மரணம், 1400 பேர் படுகாயம் –சோகத்தில் இந்தோனேசியா !

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி, இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சுமார் 8 மீ அளவுக்கு அலைகள் மேலெழும்பி தாக்கியதாக சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சுனாமியால் பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை 429 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டில் இருந்து வந்த பயனிகள் பலரையும் காணவில்லை, எனவும் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய பேரிடர் மேலாணமைக்  குழு ‘சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது, 1400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். காணாமல் போன 128 பேரைத் தேடும் பணி திவிரமாக அரசு மற்றும் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுனாமி தாக்கியப் பலப் பகுதிகளுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியவில்லை அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.‘ என அறிவித்துள்ளது.