1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 மே 2015 (09:30 IST)

தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லை: பாகிஸ்தான் தூதர்

தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லை என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
 
 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
 
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதற்கான தக்க ஆதாரங்களை வழங்கிவிட்டோம்.
 
ஆனாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும், பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிக்கு முன்பாக நிறுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று கூறினார்.
 
ஆனால், தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து உள்ளது. லக்னோவில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம், தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
 
அதற்கு பதில் அளித்த அப்துல் பாசித், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், இந்த கேள்விக்கு என்னால் ஒன்றை மட்டுமே பதிலாக சொல்ல இயலும். அந்த ஜென்டில்மேன் எங்கள் நாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.