வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 19 நவம்பர் 2014 (20:39 IST)

சுற்றுச்சூழல் தூய்மைக்காக 10,000 தொழிற்சாலைகளை மூடியது சீனா

சுற்றுச்சூழல் தூய்மையைப் பாதுகாக்க சீனாவில் உள்ள 10,000 தொழிற்சாலைகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் சீனாவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டு நடைபெற்றது. அதில், சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டுமென்ற நோக்குடன் வளர்ந்த நாடுகள் செயல்பட வேண்டும் என்றும், அவை வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டுவரும் நோக்கில் சீனாவில் உள்ள   தொழிற்சாலைகளில், 10 ஆயிரம் ஆலைகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
 
இது தொடர்பாக, சீன சுற்றுச்சூழல் துறை வெளியிடும் நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த செய்தியில், "சர்வதேச மாநாட்டை ஒட்டி, சீனாவில் உலகத் தலைவர்கள் இருக்கும் நாள்களில் சுற்றுச்சூழல் தூய்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அதிபர் ஜின்பிங் நேரடியாக மேற்பார்வையிட்டார். மேலும், பிரதமர் லீ கெகியாங், துணைப் பிரதமர் ஜாங் காவோலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மேற்பார்வையில் ஈடுபட்டனர்.
 
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பாக 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணித்தனர். இவர்கள் 60,100 ஆலைகளில் ஆய்வு நடத்தினர். மேலும், புதிதாக எழுப்பப்பட்டு வரும் கட்டடங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற 1,23,000 இடங்களை இவர்கள் கண்காணித்தனர். மாசு ஏற்படுத்தும் 10 ஆயிரம் ஆலைகள் மூடப்பட்டன. மேலும் 39,000 ஆலைகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் அவை கண்காணிக்கப்பட்டன.
 
உச்சி மாநாடு நவம்பர் 10, 11 தேதிகளில் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 1.17 கோடி வாகனங்கள் சாலையில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு, பெய்ஜிங், தியான்ஜிங், ஹெபேய், ஷான்ஸி, மங்கோலியா, ஷான்டோங், ஹெனான் ஆகிய மாகாண அரசுகள் ஒருங்கிணைந்து சுற்றுச்சூழல் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.