வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (18:15 IST)

’இஸ்லாமிய நாய்களோடு உறங்க முடியாது’ - கலவரத்தை ஆரம்பித்த புத்தமத துறவி

புத்த மதம் அமைதியானதுதான். ஆனால், அதற்காக நாய்களோடு உறங்க முடியாது என்று புத்த மத துறவி கூறியதுதான் இன்று மியான்மரில் நடக்கும் கலவரத்திற்கு அடிப்படை காரணம்.
 
இன்று மியான்மரில் முஸ்லிம்களை அழித்து நசுக்கும் விதமாக, அவர்கள் மீது மியான்மர் அரசும், சில மத அமைப்புகளும் தாக்குதல் தொடுப்பது உலகம் முழுதும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது. தலாய்லாமா கூட முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு ஆங்சான் குயிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
 

 
ஆனால், இந்த இன அழிப்பின் சூத்திரதாரியாக இருப்பவர் அசின் விராட் என்ற புத்த துறவிதான். இவர் 14ஆம் வயதில் பள்ளிப் படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார். இவருக்கு சிறு வயதில் இருந்து இஸ்லாமியர்களை கண்டால் வெறுப்பு.
 
விராத்து கடந்த 2001ஆம் ஆண்டு புத்தரின் ஒன்பது சிறப்பு அம்சங்களையும், புத்த சாஸ்திரத்தின் சிறப்புக்களையும் கூறும் விதமாக ’969’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். தொடங்கிய இரண்டு வருடத்திலேயே, அதாவது 2003ஆம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்காக 25 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
ஆனால் 2010ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டவுடன் அப்போதைய அரசுக்கு தன் முழு ஆதரவையும் அளித்தார். மேலும், 2011ஆம் ஆண்டு தெய்ன் சேனை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்ததில் சூத்திரதாரியாக இவர் இருந்தார்.
 
969 இயக்கம் இஸ்லாமிய வியாபாரத் தலங்களை கொள்ளையடித்து விட்டு கொளுத்துவது, இஸ்லாமியர்களின் வீடுகளை கொள்ளையடிப்பது, இஸ்லாமிய பெண்களை மணமுடித்து பௌத்தர்களாக மாற்றுவது மற்றும் பர்மாவை ஒரு முசுலிம் கூட இல்லாத பிரதேசமாக மாற்றுவது ஆகியவற்றை தனது முதன்மை குறிக்கோளாக கொண்டிருந்தது.
 
2013ஆம் ஆண்டு டைம் இதழ் விராத்தை பேட்டி எடுத்த போது அவர் கூறியது “புத்த மதம் அமைதியானது தான் அதற்காக நாய்களோடு (இஸ்லாமியர்கள்) உறங்க முடியாது” என்று கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதனால், டைம் இதழ் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தியது. 2013ஆம் ஆண்டு தன் வாகனத்தில் குண்டு வைத்து விட்டு, பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டு மிகப் பெரிய இன அழிப்பை நடத்தினார். அந்த அழிப்புக் கலவரங்கள் இன்றுவரை தொடர்ந்து உலகை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது.