வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (11:48 IST)

கறுப்புப் பண விவகாரம்: இந்தியாவுடன் கருத்து வேறுபாடு உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அதிகாரி தகவல்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பண விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் கருத்து வேறுபாடு உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அதிகாரி தெரிவித்தார்.
 
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இது தொடர்பாக வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 3 தொழில் அதிபர்களின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
 
இவர்களில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து உள்ளதாக குஜராத் தங்க வியாபாரி சிமன்லால் லோதியா மற்றும் டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரதீப் பர்மன், கோவா சுரங்க நிறுவன அதிபர் ராதா சதீஷ் டிம்லோ ஆகியோருடைய பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
 
கறுப்பு பண விவகாரம் குறித்து சுவிட்சர்லாந்து வெளி விவகார இலாகாவின் இயக்குனரும், சட்ட ஆலோசகருமான வாலென்டின் ஷெய்ல்வேஜெர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடத் கூறியதாவது:–
 
இந்தியாவில் புதிய அரசு பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பண விவகாரத்திற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
கணக்கில் காட்டாமல் சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிப்பது தொடர்பாக இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
 
இந்த பிரச்சினை குறித்து இந்திய அரசுடன் நாங்கள் நீண்ட விவாதம் நடத்தியும் வருகிறோம். அதில் வரிஏய்ப்பு பிரச்சினையை மட்டுமே பேசுகிறோம். அதே நேரம் சுவிட்சர்லாந்து சட்டத்தின்படி வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றம் அல்ல.
 
தற்போது நிலைமைகள் மாறி வருகின்றன. எனவே இதில் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ற நிலையை நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஆகவே இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
 
சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி பேசும்போது, அதில் வங்கி ரகசியம் என்று எதுவும் கிடையாது. அதுவும், இன்னொரு நாட்டின் அரசு வக்கீல் எங்களைத் தொடர்பு கொண்டு இது தொடர்பான தகவல்களைக் கேட்கும்போது, அங்கே வங்கி ரகசியம் என்பதற்கு இடமே இல்லை.
 
எங்களைப் பொறுத்தவரை ‘உங்களது வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்‘ விதிகளின்படி கடுமையாக நடந்து கொள்கிறோம். எனவே எங்களால் முடிந்த அளவிற்கு விரைவாக இது பற்றிய தகவல்களைத் தரமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்திய அரசு வெளியிட்டுள்ள கறுப்பு பண முதல் பட்டியலில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் பெயரும் வெளியிடப்பட்டு இருக்கிறதே? என்ற கேள்விக்கு, பதில் அளித்த அவர், இந்திய அரசுடன் இதுவரை நாங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பவர்கள் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். மற்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பற்றி எதுவும் பேசவில்லை என்றார்.
 
மேலும், திருட்டு சொத்துகளை திரும்ப ஒப்படைப்பது இன்று சர்வதேச அளவில் பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்த விஷயத்தில் சமீப காலமாக சுவிட்சர்லாந்து அரசு ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது‘ என்று பதிலளித்தார்.