வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 2 ஜூன் 2014 (16:03 IST)

தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை - ஐ.நா. கடும் கண்டனம்

உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், இந்த கொடூர குற்றத்தை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. தலைவர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் ஜார்ஜ் அளித்த பேட்டியில், "இந்தியாவில் தலித் சிறுமிகள் 2 பேர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, மரத்தில் தொங்கவிட்டு கொலை செய்தது மிகவும் கொடூரமானது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளில் நடைபெறுவது வார்த்தையால் சொல்ல முடியாத மிகக் கொடூரமான செயல் ஆகும்.
 
உலகின் பாதி மக்கள் தொகையை பெற்றுள்ள நாடுகளில், பெண்களுக்கு எதிராக சொல்ல முடியாத வன்முறைகள் நடைபெறுகிறது. பெண்கள் இடையே பாரபட்சம் மற்றும் விதிமீறல்கள் நடைபெறும் நிலையில், உலகின் எல்லா இடங்களிலும் அமைதியையும் முன்னேற்றத்தையும் காண முடியாது.

இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த கொடூர சம்பவத்தை அடுத்து, அங்கு சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் சட்ட ரீதியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், மக்களின் மனநிலை அளவில் கொண்டுவரப்படவில்லை.
இந்தக் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தக் குற்றவாளிகள் மீது காலம் தாமதிக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று ஸ்டீபன் ஜார்ஜ் கூறினார்.
 
கடந்த செவ்வாய்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் பதானில் 2 சிறுமிகள் காணாமல் போயினர். அவர்களை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 2 தலித் சகோதரிகளும் கிராமத்தின் நடுவே இருந்த மாமரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர். பிரேதப் பரிசோதனையில், சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என தெரியவந்தது.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் சத்ரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் மற்றும் சகோதரர்களான பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், ஊர்வேஷ் யாதவ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.