வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 23 அக்டோபர் 2014 (20:20 IST)

கனடா நாடாளுமன்றத் தாக்குதல் - ஒபாமா கண்டனம், மோடி பிரார்த்தனை

கனடா நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இதையடுத்து, கனடா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
கனடா தலைநகர் ஒட்டாவாவில் நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புக்கு நின்ற ராணுவ வீரர் ஒருவர், துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த வழியாகச் சென்ற காரை இடைமறித்து, அதன் மூலம் பயணம் செய்த தீவிரவாதிகள், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நுழைந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
 
 
பாராளுமன்றத்தில் போர் நினைவிடம், மைய கட்டடம், ரிடேயூ கட்டடம் ஆகிய இடங்களில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். 
 
சம்பவம் தொடர்பாக கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன், அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது, அவர் அமெரிக்க மக்கள் சார்பாக நடந்த தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக கனடா நாட்டிற்கு துணை நிற்போம் என்றும் கூறினார்.
 
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் பேசுகையில், “தீவிரவாதத் தாக்குதல் மூலம் கனடாவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது,” என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அந்நாட்டு காவல் துறை அறிவித்துள்ளது.
 
கனடா நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். அனைவரின் பாதுகாப்புக்கும் தாம் பிரார்த்திப்பதாக, மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.