வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2014 (12:48 IST)

அல்ஜீரியாவில் அதிபர் தேர்தல்

வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
15 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துவரும் அப்டெல்சிஸ் பௌடேபிலிகா மீண்டும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
 
கடந்த ஆண்டு பக்கவாதத்தினால் பௌடேபிலிகா பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதைக் குறைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
எண்ணெய் வளம்மிக்க அல்ஜீரியாவின் தேர்தல் முடிவுகளை மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத் தேவைகளில் ஐந்தில் ஒரு பங்கை அளிக்கும் இந்நாடு அமெரிக்காவுடன் சேர்ந்து தீவிரவாதத்தினை எதிர்த்து வருகின்றது. 
 
கடந்த 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரபுநாடுகளின் எழுச்சியைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான லிபியா, துனிசியா மற்றும் எகிப்து போன்றவை அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. இந்நிலையில் அதிபரின் உடல்நலக் குறைவு அந்நாட்டின் அரசியலின் அமைதியைப் பற்றிய கவலையை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
கடந்த 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரங்களுக்குப்பின் பௌடேபிலிகா அல்ஜீரியாவில் அமைதியை நிலைநாட்டி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 1962ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றபின் மிகக்குறைந்த மாற்றங்களை மட்டுமே கண்டுள்ளதாக எதிர்த்தரப்பினர் குறைகூறுகின்றனர்.